ந்தியா என்பது பல்வேறு கலாச் சாரங்களை, மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதை உணர்த்து வதில் தமிழ்நாடு மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, 1930-களின் இறுதியில், மாநிலங்களின் மொழி உரிமையை நசுக்கி, இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடித்தது. அப்போதிருந்து, இப்போதுவரை விக்ரமாதித்தன் வேதாளம் கதையைப்போல, மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக ஒன்றிய அரசோடு தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப் பதில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

Advertisment

dd

இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, பொது சுகாதாரம், கல்வி, வனம், மீன் வளம், கனிம வளம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்கு பகிர்ந் தளித்துள்ளது. ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ, பல்வேறு வழிகளில் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்குள் தனது அதிகாரத்தை நுழைக்கும் வேலையைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதன்மூலம் மாநிலங் களின் வரி வசூல் உரிமையில் கைவைத்ததால் மாநிலங்களின் வரி வருவாயில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான இழப்பீட்டையும் பேசியபடி கொடுக்காமல் இழுத்தடித்துவருகிறது. சாலைகளில் சுங்க வரி வசூலிக்கும் உரிமை மாநிலங்களுக்கு இருந்த நிலையில், தனியார் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து, அந்த வரி வசூலிலும் மாநிலங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, சுங்க வரி என்ற பெயரில் பகல் கொள்ளையே நடத்தி, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கிறது.

பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட்ட கல்வியில், புதிய கல்விக்கொள்கை மூலமாக, இலவசக் கல்வியை ஒழித்து, எண்ணிலடங்கா தேர்வுகள், நுழைவுத்தேர்வுகளைப் புகுத்தி, கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்விக் கனவில் மண்ணள்ளிப் போட்டது. மேலும், இந்தி மொழியைத் திணிப்பது, இந்துத்வா கொள்கைகளை பாடத்திட்டங்களில் புகுத்துவதுமான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. தற்போது, இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பாதிக்கக்கூடிய இந்திய கடல்சார் மீன்வள மசோதாவைச் சட்டமாக்க ஒன்றிய அரசு முயன்றுவருகிறது. இந்த மசோதா மூலமாக, சிறிய மீனவர்களின் மீன்பிடி படகுகளுக்கு லைசென்ஸ் முறை, மீன்பிடிக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் வரவுள்ளன. இதன்மூலம், மாநில அரசின் பட்டியலிலுள்ள மீன் வள உரிமையைப் பறிப்பதோடு, கடலையே நம்பிவாழும் மீனவ சமுதாயத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை வலுவாகப் பதிவுசெய்துள்ளார்.

Advertisment

ss

அதேபோல, மாநிலப் பட்டியலிலுள்ள கனிம வளத்திலும் ஒன்றிய அரசு தனது மூக்கை நுழைத்து, மாவட்ட கனிமக் கட்டமைப்பு அறக்கட்டளை நிதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. ஏழை எளிய மக்களின் நிதி உதவிக்குப் பயன்படக்கூடிய கூட்டுறவு சங்கங்களையும் கைப்பற்ற ஒன்றிய அரசு முயன்றுவருகிறது. அதேபோல, மாநில அரசை மீறி, இயற்கை வாயுவை எடுப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் செயலிலும் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. கடந்த நான்காண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையி லான அரசில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக மத்திய அரசின் கைகளுக் குச் சென்ற நிலையில், தற்போது வந்துள்ள அரசு, மத்திய அரசின் அதிகார மீறல்களுக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துவருகிறது.

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு கையகப்படுத்துவதால் நிர்வாகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரன் கூறுகையில், "இந்தியா ஒரு மாபெரும் நாடு. மக்கள் தொகை என்ற அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஏறக்குறைய 136 கோடி பேர் வாழ்கிறார்கள். இவ்வளவு பரந்த நாட்டினை ஒரே ஒரு இடத்திலிருந்து ஆட்சி செய்ய இயலாது. அதனால்தான் மாநிலங்கள் அமைத்த பின்னால், ராஜீவ் காந்தி காலத்தில், பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் அமைப்புகளுக்கும் அதிகாரங் கள் வழங்கப்பட்டன. அந்த அதிகாரங்கள் நிலைநிறுத்தப்பட்டன. 74 & 73 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் (ஸ்ரீர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ஹப் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) என்று சொல்வார்கள். இப்படியாக பரவலாக அதிகாரத்தை நாம் செலுத்தினோம் என்றால்தான் மக்கள் பயன்பெறுவார்கள். ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு இந்தியாவின் எல்லா மூலையிலும் உள்ள பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

Advertisment

mm

எமர்ஜென்ஸி காலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னால், அந்நேரத்தில் கல்வி என்பது முழுக்க முழுக்க மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருந்ததை மாற்றினார்கள். அதன்பின்னால் இப்பொழுது நாம் பார்ப்பது எல்லாம் இந்த கொரோனா காலத்தை, தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் என்ற சட்டத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதைக் கண்டோம். இதையும் தவிர இன்று உள்ள நிலைமையில் மைனர் போர்ட்ஸ் (ம்ண்ய்ர்ழ் ல்ர்ழ்ற்ள்) எனப்படும் சிறிய துறைமுகங் களின்மேல் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள், அதிகாரங்கள் மிகப் பரவலாக இருந்தன. இவை சிறு மீனவர்களுக்கு, எந்திரப்படகில்லாமல் சிறு படகில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களிலிருந்து தொடங்கி பலருக்கும் உதவியாக இருக்கும் என்ற நிலை இருந்துவந்தது. தற்போது இதன்மீதும் ஒன்றிய அரசு கை வைக்கப் பார்க்கிறது. இது இந்தியா வுக்கு நல்லதல்ல.

இந்த (பா.ஜ.க.) ஒன்றிய அரசு வந்தபின்னர் அவர்கள், Unity of India என்பதைவிட niformity of India என்பதைப் பற்றித்தான் அதிகமாக கவனத்தில் கொள்கிறார்கள். Uniformity என்று வந்தால் அங்கு Unity இருக்காது. பாரதியார், "செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என மிக அழகாகச் சொன்னார். ஆக, அனேக மொழிகள் பேசினாலும் நம் பாரத நாட்டின் சிந்தனை ஒன்றாகத் தான் இருக்கும் என்றார். அப்படி யான நிலை தொடர வேண்டு மென்றால் இந்த ஒன்றிய அரசு, ஒன்றின்பின் ஒன்றாக எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொள்ளும் போக்கினை மாற்ற வேண்டும். இந்த போக்கு, இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிக மிக ஆபத்தானது'' என்றார்.

sd

இவரது கருத்துப்படி, நிர் வாகத்திறன் சீரழிவுக்கு, மாநிலங் களின் வரி உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி.யை சரியான உதாரணமாகக் கூறலாம். ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலங்களின் வரி வருமானத்தில் பெரும்பங்கைத் தனதாக்கிக்கொள்ளும் ஒன்றிய அரசு, மக்களுக்கான திட்டங் களுக்குச் செலவிடுவதில், மாநிலங் களுக்கு உரிய நிதிப்பங்களிப்பைக் கொடுப்பதில்லை. அதாவது, ஒரு தொழிலை நடத்தும்போது, முதலீடு போடுபவர் ஒருவராகவும், அதன் லாபத்தை அனுபவிப்பவர் வேறொருவராகவும் இருப்பதுபோன்ற மோசடிதான் ஜி.எஸ்.டி.யில் நடக்கிறது. இப்படி வசூலிக்கும் வரிப்பணத்தை மக்களுக்காகச் செலவிட்டாலாவது சற்று ஆறுதல் கொள்ளலாம். ஆனால் அவற்றையெல்லாம் தங்களுக்கு ஆதரவான கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு கடனாகவும், மானியமாகவும் அளித்து அவர்களை வளர்த்து, தங்கள் ஆட்சியையும் வளப்படுத்திக் கொள்ளும் செயலில் இறங்கியுள்ளனர்.

அதற்கேற்ப நாடு முழுக்க ஒரே ஆதார் அட்டை, ஒரே ரேஷன் அட்டை, ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே மொழி என்று அனைத்திலும் ஒற்றைத்தன்மையைப் புகுத்தி, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்துவருகிறது. தமிழ்நாட்டி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், ஒன்றிய அரசின் இத்தகைய தவறான செயல்பாடுகளுக்கு எதிராகக் குரலெழுப்பிவருகிறார்கள்.

மாநிலங்களின் உரிமையில் தலை யிடும் ஒன்றிய அரசின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிகுமாரிடம் கேட்டபோது, "மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின்பு மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் தொடர்ச்சியாக தலையிடுகிறார்கள். தற்போது டி.என்.ஏ. மசோதா என்றொரு மசோதாவைக் கொண்டுவருகிறார்கள். இதன்மூலம், சந்தேகத்துக்குரிய யாருடைய டி.என்.ஏ.வையும் சேகரித்து, அதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணப்போவதாகக் கூறப்படுகிறது. இதற்கென தேசிய அளவில் டி.என்.ஏ. டேட்டாபேஸ் தயார் செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே பெகாசஸ் உளவுபார்த்த பிரச்சனை பெரிய களேபரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைவரின் டி.என்.ஏ.வையும் சேகரிப்பது பேராபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். இதன்மூலம், மாநில அரசின் காவல்துறை அதிகாரத்திலும் ஒன்றிய அரசு தலையிடுகிறது.

dd

இந்தியாவில் கூட்டாட்சிக்கான குரல் எழுப்பவேண்டிய தேவை அனைத்து மாநிலங் களுக்கும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் மாநில உரிமைக்காகக் கடுமையாகக் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லை. மீன்வள மசோதாவை நாங்கள் எதிர்த்தபோது, நானும், எங்கள் தலைவர் திருமாவளவனும் இணைந்து சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பார்த்தபோது, "தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?'' என்று கேட்டார். "நாங்கள் இந்த மசோதாவை முழுமையாகப் படித்ததால் இதிலிருக்கும் ஆபத்து தெரிகிறது'' என்று கூறினோம். மற்ற மாநிலத்தவர்களுக்கு இதுகுறித்த சிந்தனையே இல்லாத மோசமான சூழல் இருக்கிறது.

பா.ஜ.க.வின் "ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே மொழின்னு கொண்டுவரும் முயற்சிக்கு மாற்று, கூட்டாட்சித் தத்துவமாகும். மாநில உரிமைகளை நிலைநாட்டுவதற்காக மாநிலங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும். ஏற்கனவே, சிறு துறைமுகங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் துறைமுக சட்ட முன்வடிவை எதிர்ப்பதற்காகவும், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தக் கோரியும் மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதமெழுதினார். இதுபோல மாநில உரிமைகள் மற்றும் சமூகநீதி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் தமிழ்நாடுதான் முன்னின்று வழிகாட்டியாகச் செயல்பட வேண்டியுள்ளது. இதன்மூலம், பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது, தேர்தலுக்கான கூட்டணியாக இல்லாமல், மாநில உரிமைகளுக்கான கூட்டணியாக மாற வேண்டும்'' என்றார்.

dd

நம்மை ஆண்டவர்களின் சர்வாதிகாரத்தி லிருந்து விடுதலையாகப் போராடிய நாம், தற்போது ஜனநாயக முறையில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசின் சர்வாதிகாரத் தன்மைகொண்ட செயல்பாட்டுக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-தெ.சு.கவுதமன்